நாடகம் ஆடிய பெண் துறவி... சிசிடிவியில் அம்பலமான உண்மை...

எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பாதையாத்திரையாக வந்தபோது தன்னை சிலர் தாக்கியதாக பெண் துறவி புகார் அளித்திருந்த நிலையில், அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாரும் தாக்காமலேயே பெண் துறவி பொய் புகார் அளித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்...

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவா் இளம்பெண் சப்ரா பதக். இவர் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருடன் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி நான்காயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார்.

ராமேஸ்வரம் நோக்கி வந்த பெண் துறவி சப்ரா பதக்,   பரமக்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை தனது யாத்திரையை தொடங்கினா். அப்போது, சில மர்ம நபர்கள் தன்னை வழிமறித்து காரில் இருந்த ராமர் கொடியை உடைத்து 'ராமர் இங்கு இங்கில்லை எனவும் உடனே திரும்பி போ என மிரட்டி தன்னையும், தனது காரையும் சேதப்படுத்தியதாக பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக பரமக்குடி காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு சப்ரா பதக், யாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காண்ப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். 

தொடர்ந்து, சப்ரா பதாக் தாக்கபட்டதாக கூறப்படும் இடங்களுக்கு அவரை அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. 

குறிப்பாக முதலில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை பரமக்குடி அருகே தடுத்து நிறுத்தி தாக்கியதாக புகார் அளித்தவா், விசாரணையின் போது, சத்திரக்குடி அருகே நாலு பேர் கொண்ட குழு தன்னை தாக்கியதாக தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினா், உண்மையை தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது பரமக்குடி அருகே சப்ரா பதக்கின் சகோதரர் சாலையில் உள்ள கற்களை சேகரித்து காருக்குள் வைக்கும் காட்சி பதிவாகி இருந்ததாக காவல்துறையினா் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த காட்சியை கைப்பற்றிய காவல்துறையினா், பெண் துறவியிடம்
அந்த வீடியோவை காட்டி விசாரித்தனர். தான் கூறியது பொய் என்றும் பெண் துறவி ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக, பெண் துறவி, அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் 

தன் மீது காவல்துறையினா் வழக்கு பதிவு செய்ததை அறிந்த பெண் துறவி ,  உடனடியாக ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரத்தில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரபிரதேசத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பெண் துறவி யாருடைய தூண்டுதலின் பேரில் இவ்வாறு நடந்து கொண்டார் எனவும், பெண் துறவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்யார் என்ற விசாரணையை போலீசார் முடுக்கி உள்ளனர். 

Night
Day