தூத்துக்குடியில் ஆசிரியர்களிடம் ரூ.36 கோடி மோசடி - பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடந்தையா...

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களிடம் , தொண்டு நிறுவனம் நடத்தி வரும் நபர், 36 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அரசு வேலைக்கு ஆசைப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்தவர் பாலகுமரேசன். இவர் தூத்துக்குடியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனத்தை  நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனத்தின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் செயல்படுகிறத. இந்த தொண்டு நிறுவனம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக ஆசிரியர்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். விளம்பரத்தை பார்த்து, நேர்முக தேர்விற்கு வந்த பட்டதாரி ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்தி, அர்வகளுக்கு பயிற்சி அளித்ததுடன்,  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு சேர்த்துள்ளார்.

மேலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடமானது, உங்களுக்கு தேர்வு  எழுதாமல் வாங்கி தருவதாகவும்,  58 வயது வரை அந்தப் பள்ளியில் வேலை பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.  மேலும் அந்த தொகை ஆசிரியர்களின் பெயரில் இன்சூரன்ஸ் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டு பின்பு வேலையிலிருந்து விடுபடும்போது முதிர்வு தொகையாக வழங்கப்படும் என்றும், பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 351 பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் சேர்வதற்காக தலா 5 லட்சம் ரூபாய்  என சுமார் 36 கோடியே 13 லட்ச ரூபாயை அவரிடம் அளித்துள்ளனர்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள மாணவ மாணவிகளுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு சம்பளத்தையும் தாமே வழங்குவதாக கூறியுள்ளார். இதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிப்பது குறித்து அதிகாரிகள் எழுத்துப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் ஒப்புதலோடு, கொரோனா காலகட்டங்களில் கூட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் சேர்த்துள்ளார்.

வேலையில் சேர்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சுமார் 4 மாதம் முதல் ஓராண்டு வரை தொண்டு நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், பின்னர், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆசிரியர்கள், பாலகுமரேசன் மீது நடவவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தங்கள் பணத்தை மீட்டுத்தர வலியுறுத்தியும் கடந்த ஆண்டு ஜீலை மாதம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து பாலகுமரேசன் தலைமறைவானதாகவும், அவரது தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்ற போது பாலகுமரேசன் தங்களை வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்ததாகாவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர் காந்தி மள்ளர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தலைமறைவாக இருந்த  பாலகுமரேசனை நேற்று கைது செய்தனர்.

36 கோடி ரூபாய்க்கு மேல்  மோசடியில் ஈடுபட்ட தனியார் தொண்டு நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மெகா மோசடியில், இதில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் யாருக்கேனும்  பங்கு உள்ளதா? என்பது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day