துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்- அமல்படுத்த ஆணை

எழுத்தின் அளவு: அ+ அ-

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை செயல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி மீது கடந்த 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிந்து விசாரணை செய்தது. கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது. இதையடுத்து வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.

தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. துரைமுருகன் ஆஜராகாத நிலையில், அவரது மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். இதனால் சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிமன்றம், துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை வரும் 15 ஆம் தேதி அமல்படுத்த தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.

Night
Day