திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடுமையாக பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் திருப்பூரில் மாதம் நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு 45 ஆயிரம்  கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வரும் திருப்பூரில்  மட்டும் மாதம் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் தெரிவித்துள்ளனர். 

மேலும் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் 30 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் 40 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னலாடைகளை தற்போது 16 டாலர்க்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் அமெரிக்காவுக்கு 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏற்றுமதி ஆடைகள் நிறுத்தப்பட்டுள்ள சூழலில் சில பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ள உற்பத்தியாளர்கள், இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தம் ஆகியவற்றால்  கிட்டத்தட்ட 50 சதவீத இழப்புகளை ஈடுசெய்ய உதவும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் வங்கதேசம், வியட்நாம், இலங்கை போன்ற போட்டி நாடுகளுடன் ஆடை விலை நிர்ணயம் செய்வதில் சிறப்பான நிலையை அடைய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day