திருப்பூரில் ஓர் தாராவி..!

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரிர் தூய்மை பணிகளுக்காக தனியார் நிறுவனம் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்கள், அடிப்படை வசதிகள் இன்றி சிறிய குடிசைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள தாராவி குடிசை பகுதியை நினைவு படுத்தும் இந்த பகுதியில் துப்புரவு தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

குருவி கூடுபோல் நெரிசலாக சிறிய சிறிய குடிசைகளுடன் நாம் காணும் இப்பகுதி மும்பையில் உள்ள தாராவி அல்ல.. திருப்பூரில் உள்ள ஒரு பகுதிதான்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சி நிர்வாகம் எஸ்.டபிள்யூ.எம்.எஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த நிறுவனம் துப்புரவு பணிகளுக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளது. அவ்வாறு அழைத்துவரப்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு திருப்பூர் கோவில் வழி பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள இடத்தில், அடிப்படை வசதிகள் இன்றி குடிசைகளை அமைத்து தங்க வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

அந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி உள்ள நிலையில், அங்கு 5 கழிவறைகள் மட்டுமே உள்ளன. மேலும், போதிய குடிநீர் வசதியையும் செய்து தராமல், அந்த தொழிலாளர்களுக்கு சொற்ப கூலியை மட்டுமே கொடுத்து தனியார் நிறுவனம் வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பொட்டல் வெளியில் குருவிக்கூடுகளை போல் அமைக்கப்பட்டுள்ள சிறிய குடிசைகளில் தங்கி இருக்கும் துப்புரவு தொழிலாளர்கள், இட நெருக்கடி காரணமாகவும், கோடை வெயிலின் வெப்பம் காரணமாகவும் எண்ணற்ற துயரங்களை அனுபவிக்கின்றனர். 

இதுதொடர்பாக மேலும் விவரங்களை சேகரிக்க எமது ஜெயா டிவி செய்தியாளர் குழுவினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போது, அங்கு வசிக்கக்கூடிய தொழிலாளர்கள் போதிய கழிப்பிட வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாக வேதனை தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வீடியோ பதிவு செய்த போது தடுத்து நிறுத்திய தனியார் நிறுவன ஊழியர், ஒளிப்பதிவாளருக்கு மிரட்டல் விடுத்து அராஜகத்தில் ஈடுபட்டார். 

துப்புரவு தொழிலாளர்களுக்கு ரேசன் கார்டு இல்லாததால் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்கும் நிலை உள்ளதாகவும், மேலும், வீரபாண்டியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்குமாறு மாவட்ட ஆட்டசியரிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என துப்புரவு தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இட நெருக்கடியோடு, சிறிய குடிசைகளில் அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் இந்த இடம், மும்பையில் உள்ள தாராவியை போல் திருப்பூரிலும் ஒரு தாராவியா? என்ற கேள்வியை காண்போரின் மனதில் எழச் செய்கிறது. மேலும், வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில், திருப்பூரை தூய்மை படுத்த வந்திருக்கும் மகாராஷ்டிர மாநில துப்புரவு தொழிலாளர்களுக்கு தங்க இடம், குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளையாவது முறையாக செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day