திருப்பத்தூர் - வனப்பகுதிக்குள் விடப்பட்ட சிறுத்தை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூரில் கார் ஷெட்டுக்குள் புகுந்து போக்கு காட்டி வந்த சிறுத்தையை 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மேரி இமாகுலேட் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்ததை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டினர். 

இருப்பினும் பள்ளி காவலாளி கோபாலின் காதை சிறுத்தை கடித்ததில் படுகாயமடைந்த அவரை ரத்த வெள்ளத்தில் மீட்ட ஆசிரியர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அங்கிருந்து அருகில் இருந்த கார் ஷெட்டிற்கு தாவிய சிறுத்தை பல மணி நேரம் அங்கேயே பதுங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கார் ஷெட்டிற்குள் புகுந்த சிறுத்தையை கண்ட ஷெட் ஊழியர்கள், பதற்றமடைந்து உயிர் பயத்தில் ஷெட்டில் நின்றிருந்த இரு கார்களுக்குள் பாதுகாப்பாக தஞ்சமடைந்தனர். இதனையடுத்து கார் ஷெட்டில் இருந்த 5 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். இதனைதொடர்ந்து 12 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்து கூண்டில் அடைத்தனர்.

இதனையடுத்து, பிடிபட்ட சிறுத்தையை தமிழக-ஆந்திரா எல்லையையொட்டி உள்ள வீரமலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.


Night
Day