தர்ப்பணம் கொடுக்க கட்டணம் - பக்தர்கள் கடும் கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தர்ப்பணம் கொடுக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து கண்டனங்கள் எழுந்ததால், அறிவிப்பை கோயில் நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து சற்றுவிரிவாக பார்க்கலாம்.

பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

அங்குள்ள, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் நீங்கி குடும்பம் செல்வ செழிப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு 22 தீர்த்தங்களில் குளிக்க வேண்டும் என்பது ஐதீகம்.. இங்கு, தர்பணம் செய்தால் காசிக்கு சென்று கொடுத்தற்கு சமம் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள்  அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னொர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக, மாதந்தோறும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு படையெடுப்பார்கள். அப்படி, தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களிடம் இருந்து அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று வந்தனர். 

இந்நிலையில், அக்னி தீர்த்தக்கரையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, திதி, தர்ப்பணம் செய்ய 200 ரூபாயும், பிண்ட பூஜை செய்ய 400 ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும், 200 ரூபாயில் இருந்து 80 ரூபாயும், 400 ரூபாயில் இருந்து 160 ரூபாயும் புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த, அறிவிப்பு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புரோகிதர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் உத்தரவு இல்லாமல் பிரசித்தி பெற்ற கோயில் நிர்வாகம் எப்படி அறிவிப்பு வெளியிடும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் வசூலித்து அதன் மூலம் கல்லாகட்ட திட்டமிட்ட அமைச்சர் சேகர் பாபு விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் நூதன கொள்ளையில் ஈடுபடும் புது முயற்சியை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோயில்கள் மூலம் நூதன கொள்ளையில் ஈடுபடும் விளம்பர திமுக அரசின் ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் என பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

Night
Day