தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சுமார் 58 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு வாகனங்களும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

சென்னையில் சைதாப்பேட்டை, தி நகர் உள்ளிட்ட ஆயிரத்து 646 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகளிகள் மற்றும் முக்கிய இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்து 313 மையங்கள், 33 நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள் மற்றும் 48 போக்குவரத்து முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 197 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 5 ஆயிரத்து 343 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 20 பேருந்து நிலையங்கள், 6 ரயில் நிலையங்கள், உள்ளிட்ட 875 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த முகாமின் மூலம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 997 குழந்தைகள் பயனடைவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் 925 மையங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 366  குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ரெட்டியார்ப்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செவிலியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என 3 ஆயிரத்து 627 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கரூர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 831 மையங்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் தங்கவேல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்படி, 3 ஆயிரத்து 417 பணியாளர்கள் மூலம் 74 ஆயிரத்து 954 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 895 மையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 259 மையங்கள் என மொத்தம் ஆயிரத்து 154 மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.  பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான சுமார் ஒரு லட்சத்து 98 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 4 ஆயிரத்து 616 பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 917 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் என ஆயிரத்து 256 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 705 மையங்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செட்டிக்குளம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சத்துணவுத் துறையினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தோர் என  6 ஆயிரத்து 154 பேர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட ஆயிரத்து 670 மையங்களின் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.  ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 400 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார துறை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் இன்று 455 முகாம்கள் மூலம் 81 ஆயிரத்து 334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது. அதன்படி புதிய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் மற்றும் கடற்கரைச் சாலை, மணக்குள விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தமிழ்நாடு - புதுச்சேரி எல்லைகளான காலப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக் கோவில் பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

varient
Night
Day