தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் - மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தின் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர்கள் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான சான்றாக பிறப்புச் சான்று, கடவுச் சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியூரில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்களின் பெயர்களை நீக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.  அப்போது வெளியூரில் வசிப்பவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பதால் வெளியூரில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு  புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் வெளியூர்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசித்தாலும்  தங்கள் சொந்த ஊரில் உள்ள  வாக்காளர் பட்டியலிலேயே  பெயர் சேர்த்து வாக்காளர் அட்டையை வைத்திருப்பார்கள். இனி அவர்கள் வசிக்கும் இடத்தில் தான் வாக்களிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனிடையே, பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடவில்லை என்று, தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

varient
Night
Day