டாஸ்மாக் மேலாளர் சங்கீதாவிடம் ED விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ஆஜரான டாஸ்மாக் பொதுமேலாளர் சங்கீதா மற்றும் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடம் விசாரணை நிறைவடைந்தது.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, எம்.ஆர்.சி நகரில் உள்ள தொழிலதிபர் ரத்தீஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், தொழிலதிபர் தேவக்குமார், மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் ஆகியோரையும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் பொதுமேலாளர் சங்கீதா மற்றும் துணை பொதுமேலாளர் ஜோதி சங்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, கடந்த 19ம் தேதி ஆஜரான ஜோதி சங்கரிடம் மதுபான ஒப்பந்தங்கள், காலி பாட்டில்கள் விற்பனை, வரவு செலவு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல், முன்னாள் மேலாளர் சுமனிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் டாஸ்மாக் பொதுமேலாளர் சங்கீதா மற்றும் துணை பொதுமேலாளர் ஜோதி சங்கர் ஆகியோர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்தநிலையில், துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை, நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்முதல் தொடர்பாக சுமார் 8 மணி நேரமாக அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட பீர் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மட்டும் கொள்முதல் செய்யப்பட்டதாக ஜோதி சங்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day