சேலை விற்பனையில் மயங்கி நோயாளிகளை மறந்த செவிலியர்கள்!

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு சேலை விற்பனையை பார்ப்பதில் செவிலியர்கள் ஆர்வம் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எங்கே நடந்தது இந்த கூத்து..? சற்று விரிவாக பார்க்‍கலாம்.

ஆரம்பர சுகாதார நிலையத்தில் நோயாளிகள் காத்திருப்பதை மறந்து விற்பனைக்கு வந்த சேலையை செவிலியர்கள் மெய்மறந்து பார்க்கும் காட்சிகள்தான் இவை.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்‍கணக்‍கான ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்‍காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தைதான் நாடி வருகின்றனர். 

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் வெப்பம் தாங்காத பொதுமக்கள், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சுவாசக்‍கோளாறுகள் என பல பாதிப்புகளுடன் சிகிச்சை பெற வந்தனர். ஆனால், வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் பல மணி நேரம் காக்க வைத்த செவிலியர்கள் ஒரு அறையில் ஒன்றுகூடி சேலை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

ஆரம்பர சுகாதார நிலையத்திற்கு சேலையை விற்பனை செய்தவற்காக வந்த
பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் ரெக்கை கட்டி பறந்துவருகிறது.

உடல் நலக்‍கோளாறால் அவதிப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வந்தால், அவர்களை கவனிக்காமல் நீண்ட நேரம் செவிலியர்கள் காத்திருக்க வைத்ததால் கடும் விரக்தி அடைந்தனர். இதுகுறித்து கேட்டபோது  ஆத்திரமடைந்த செவிலியர்கள், நோயாளிகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

செவிலியர்களின் அலட்சியப் போக்‍கை கண்டு மன வேதனை தாளாத நோயாளி ஒருவர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கூத்தையெல்லாம் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

நோயாளியின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகம், பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது எனவும் செவிலியர்கள் யாரும் சேலையை வேடிக்கை பார்க்க செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

வசதி படைத்த மக்‍களோ தங்களது உடல்நிலையில் லேசான பாதிப்பு ஏற்பட்டாலே தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்வர். ஆனால், கையில் காசு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு மருத்துவமனைகளையும் நாடி வருகின்றனர். அப்படிப்பட்ட மக்‍களுக்‍கு அர்ப்பணிப்பு உணர்வோடு சிகிச்சை அளிக்‍க வேண்டிய செவிலியர்களோ, தன்னிலை மறந்து நோயாளிகளை காக்‍க வைத்ததுதான் கொடுமை.

இனியாவது செவிலியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து உண்மையான சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day