எழுத்தின் அளவு: அ+ அ- அ
தொடர் விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறையை முடித்து சென்னையை நோக்கி படையெடுத்த மக்களால் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ஆயுத பூஜை விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்க உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், வண்டலூர் பெருங்களத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்திலிருந்து வண்டலூர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன்காரணமாக, வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையிலும் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திடிரென பெய்த மழை காரணமாக சாலையோரம் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
தொடர் விடுமுறையை முடிந்து அன்றாட பணிக்கு வாகனத்தில் செல்லும் மக்களால் ஈரோடு- விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அதிகளவிலான வாகன ஓட்டிகளால் குவிந்ததால் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் விடுமுறை நேரத்தில் இது போன்று ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மாற்று வழியை அரசு கையாள வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.