கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்சி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தடை விதிக்கவும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தவும் கோரி தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்டோர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது. காரசார விவாதங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், தவெக உள்ளிட்டோர் தொடர்ந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்த குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள் என்றும் அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யும்படி இந்தக் குழுவுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் நடத்தும் விசாரணையை மாதந்தோறும் குழுவிடம் சிபிஐ அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
வழக்கில் உத்தரவை வாசித்த பிறகு பல்வேறு கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்த முறைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்பிற்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எப்படி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டார், முதலமைச்சர் விசாரணை ஆணையம் அமைத்த நிலையில் எவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் தன்னிச்சையாக இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை எவ்வாறு கிரிமினல் வழக்காக பதிவு செய்தது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
சென்னை உயர் நீதிமன்ற பிரதான அமர்வில் தேர்தல் பிரச்சார வழிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கு, கிரிமினல் வழக்காக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 2 மனுக்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தாண்டி நீதிமன்றம் தானாகவே அதன் வரம்பை விரிவாக்கி உத்தரவுகளை வழங்கியதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து சிபிஐ விசாரணை கோரிய மனுத் தாக்கலில் உச்ச நீதிமன்றத்தில் மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அது, உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதனை கருத்தில் கொள்வோம் என்றும், மனுத்தாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடுவோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.