சென்னையை குளிர்வித்த கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் வீட்டைவிட்டு மக்கள் வெளியே செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை அருகே சூறாவளி காற்றுடன் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. நாச்சிப்பட்டு, அரசம்பட்டு, மலப்பாம்பாடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். கடந்த நில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெள்ளிமேடுபேட்டை, மேல்பாக்கம், சாரம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மணலூர்பேட்டை, செட்டித்தாங்கல், சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவியது.


Night
Day