சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள் கடந்த 70 நாட்களாக வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடு, உணவு ஆகியவை கொடுப்பதாக தூய்மை பணியாளர்களை விளம்பர திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி இன்று முதல் தொடர் போராட்டம் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையரிடம் தூய்மை பணியாளர்கள் மனு அளிக்க வந்ததால், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மண்டலம் 5, 6-ஐ சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் முன்னெடுத்தனர். ஆனால் ரிப்பன் மாளிகை வாசலிலேயே தூய்மை பணியாளர்களை தடுத்து நிறுத்தி மனு கொடுக்க விடாமல் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்றனர். தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் அடக்கு முறையை கையாண்டு குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்களை மாநகராட்சியின் சுவரை கூட நெருங்க விடாமல் போலீசார் கைது செய்ததாக கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர். எங்களை கைது செய்தாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபவதாகவும், வேலையில்லாமல் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கும், உணவுக்கு கூட வருமானம் இல்லாமல் தவிப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்க வந்த 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் மயிலாப்பூர், ஆலந்தூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஒப்பந்த ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் சார்பில் சிஐடியு தொழிற்சங்கத்தினருடன், நகராட்சி ஆணையர் அமித், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தனியார் ஒப்பந்த நிறுவன அலுவலர்கள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது, சம்பளம், தீபாவளி போனஸ் எந்த தேதியில் வழங்கப்படும் என்பதை எழுத்துப்பூர்வமாக தர இயலாது என தனியார் ஒப்பந்த நிறுவனம் அலுவலர்கள் தெரிவித்ததால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டால் பணி நீக்கம் செய்து விடுவோம் என ஒப்பந்த நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது, சிஐடியு தொழிற்சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.