செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்து வரும் மத்திய ஆய்வுக்குழு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து மத்தியக்குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ளனர்.

நெல் கொள்முதல் செய்யும் அதிகபட்ச ஈரப்பதம் 17 சதவீதம் என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தற்போது தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால், ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஈரப்பதத்தின் அளவை ஆய்வு செய்ய உணவுத் துறையின் இருப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர் தலைமையில் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்களுடன் 3 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுக்கள் இன்றும், நாளையும் கள ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் குழு இன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும், நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த வகையில், முதலாவதாக செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் வருகை தந்த மத்திய குழுவினரை ஆட்சியர் சிநேகா வரவேற்றார். இதனை தொடர்ந்து ஆட்சியரகத்தில் மத்திய குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

பின்னர், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கீரப்பாக்கம் பஞ்சாயத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற மத்திய குழுவினர், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டு
ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கல்பாக்கம் அருகே ஆயப்பாக்கம்,  தத்தலூர், ஒழதூர், ஈசூர், படாளம், கள்ளபிராண்புரன், புலம்பாக்கம், கயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மழை நீரால் சேதமடைந்த நெற்பயிர்களையும் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Night
Day