சாலையை தோண்டி 40 நாட்களாகிடுச்சு... புதிய சாலை அமைக்காததால் குமுறும் சென்னை மக்கள்..

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய சாலைகள் அமைக்கும் பணி கடந்த 31ஆம் தேதியே முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதும் பல இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

ஆட்சிக்கு வந்தது முதல் மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாமல் விளம்பரம் செய்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறது விளம்பர திமுக அரசு. சாலைகள் சேதம், குடிநீர் தட்டுப்பாடு, ரேஷன் கடைகளில் முறைகேடு என தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை நகரின் அனைத்து சாலைகளிலும் ஏதோ ஒரு பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை பெருநகர மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறுகிறது. குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளை புதுப்பிக்கும் வகையில் முதல்கட்டமாக 400 கோடி ரூபாயை ஒதுக்கியது சென்னை மாநகராட்சி. அதில் முக்கிய போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 200 சாலைகள் ஜூலை 31ஆம் தேதிக்குள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சாலைகளை சீரமைப்பதற்காக தோண்டி 40 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை சாலைகள் புதுப்பிக்கபடாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சூளைமேடு பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஜூலை மாதமே முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பணிகள் ஆகஸ்ட் வந்த பிறகும், இன்னும் தொடங்காமல் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 106 வது வார்டில் உள்ள பாரி தெருவில் புதிதாக சாலை அமைக்க கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கின. இது, நெல்சன் மாணிக்கம் சாலை, நுங்கம்பாக்கம் சாலையை இணைக்கும் ஒரே சாலையாக உள்ளது. கோயம்பேட்டில் இருந்து சூளைமேடு செல்வதற்கு பிரதான சாலை என்பதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகிறது. 

சாலைகள் தோண்டப்பட்டு 40 நாட்களுக்கு மேலாக அப்படியே விடப்பட்டதால் அந்த வழியாக செல்லும் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளால் விபத்துக்குள்ளாகும் அபாய சூழல்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

திமுகவின் முக்கிய தலைவர்களின் சொந்த தொகுதியாக இந்த தொகுதி இருந்தும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

ஒருபுறத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தாமதத்தால் மக்கள் சிரமத்தை சந்திப்பதும் மற்றொருபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் ஒரே நாளில் சேதம் அடைந்து காட்சியளிப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் புதிய சாலைகள் அமைப்பதற்காக ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் சாலைகள் அமைக்கும் பணிகளை முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்வது, குறிப்பிட்ட காலத்திற்கு சாலைகள் அமைக்காதது, தரமற்ற சாலைகள் அமைத்து அவை ஒரு சில நாட்களில் சேதம் அடைவது உள்ளிட்டவைகளால் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது. இதனால் அடிப்படை தேவைகள் பூர்த்தியடையாமல், பாதிக்கப்படுவது என்னமோ சாமானிய மக்கள் என்பது தான் நிதர்சனமாக உண்மை.

Night
Day