சாத்தூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆலையில் உள்ள 10 பேரின் நிலை தெரியாததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

சிவகங்கை மாவட்டம் விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கம்பட்டியில் திருமுருகன் என்ற பெயரில் சொந்தமாக பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஃபேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தால், சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு ஏற்பட்டதால், சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்டு ஒரு மணிநேரமாகியும் கட்டடம் அருகே செல்ல முடியாமல் தீயணைப்புத்துறை திணறி வருகின்றனர். மேலும், பட்டாசு ஆலையில் உள்ள 10 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரசாயனம் கலக்கும் அறையில் தீ பற்றியதால், வெடி விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வெடி விபத்தில் சிக்கிய பட்டாசு ஆலையில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



varient
Night
Day