சத்துணவில் அழுகிய முட்டை - மாணவர்கள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

 விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்பட இருந்த முட்டைகள் அழுகி துர்நாற்றம் வீசியதை அறிந்த பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தழுதாளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் ஆயிரம் முட்டைகளை ஒப்பந்ததாரர் அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. 200 முட்டைகளை எடுத்து சமைத்த போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், பெற்றோரிடத்தில் தகவல் அளித்தனர். இதனையடுத்து திரண்டு வந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள்  பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர், மீதம் இருந்த முட்டைகளை உடைத்து சோதனை செய்து பார்த்த போது துர்நாற்றம் வீசியதுடன், முட்டைகள் அழுகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அழுகிய அனைத்து முட்டைகளும் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும் என பெற்றோரிடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி கூறினார். அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் அனைத்தும் அழுகி வீணாகி போன சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

varient
Night
Day