குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - தத்தளிக்கும் மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே குடியிருப்புகளுக்குள் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் நத்தமேடு ஏரி முழுவதுமாக நிரம்பியதால், குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் முழங்காலுக்கு மேல் மழைநீர் தேங்கியிருப்பதால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் நத்தமேடு ஏரி நிரம்பி ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், வீடுகளை சுற்றி தண்ணீர் இருப்பதால் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாகவும், ஏரியை தூர்வராமல் இருப்பது தான் இந்த பாதிப்புக்கு காரணம் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர் பகுதியில் குடியிருப்புகக மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் வீடுகளிலயே மக்கள் முடங்கியுள்ளனர். குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற இதுவரை மாவட்ட ஆட்சியரோ, சட்டமன்ற உறுப்பினரோ, அதிகாரிகளோ யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அம்பத்தூர் பகுதியில் விடாமல் பெய்து வரும் மழையால் குண்டும் குழியுமான சாலையில் பள்ளம் எது, சாலை எது என்று தெரியாமல் அவதிபடுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நகரத்தின் முக்கிய தொழிற்பேட்டையாக திகழும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, சிடிஎச் சாலையில் மழைநீர் நிரம்பி இருக்கும் வடிகால்வாயில் சிக்கி அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. அம்பத்தூர் தொழிற்பேட்டை பாடி இடையே உள்ள மழைநீர் வடிகால்வாயில் நீர் நிரம்பியிருப்பதால் திறந்து இருக்கிறதா அல்லது மூடி இருக்கிறதா என்பது தெரியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விழுந்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க உடனடியாக கால்வாயை மூட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day