கால்களை இழந்த இளைஞருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அருகே உயரழுத்த மின்சார கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இளைஞர், சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட ஏதுவாக, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அனுப்பி வைத்துள்ளார். இதற்காக இளைஞரும், அவரது குடும்பத்தினரும் சின்னம்மாவுக்‍கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்‍ கொண்டனர். 

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து - சத்யா தம்பதியரின் 2வது மகன், 19 வயதாகும் பூபாலன், ஐடிஐ படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து தனது ஏழ்மை குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இளைஞர் பூபாலன், கிரிக்கெட் விளையாடிய போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாடியில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது பள்ளி மாடியில் தாழ்வாக சென்ற 22 கிலோ வாட் உயரழுத்த மின்சார கம்பி இளைஞர் பூபாலன் தலையில் உரசியதில் படுகாயம் அடைந்தார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பூபாலனின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டன. விவசாய கூலி வேலை செய்து வரும் பூபாலனின் தந்தை, மீன் வியாபாரம் செய்து வரும் தாய், 12ஆம் வகுப்பு படித்து வரும் தம்பி உள்ளிட்டோரின் ஒரே நம்பிக்கையாக இருந்து வந்த இளைஞர் பூபாலனின் வாழ்க்கை கேள்விக்குறியானது. தாழ்வாக செல்லும் மின் கம்பியை மாற்றக்‍ கோரி அப்பகுதி கிராம மக்கள் பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் இருந்து வந்த காரணத்தால், இளைஞர் பூபாலனின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியானது.

இது தொடர்பான செய்தி நமது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த செய்தியைப் பார்த்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மிகுந்த மன வேதனை அடைந்து, கால்களை இழந்து பாதிக்கப்பட்ட பூபாலன், அவரது தாய் சத்யா ஆகியோரை செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். 2 கால்களையும் இழந்து மனமுடைந்த நிலையில் இருந்த இளைஞர் பூபாலனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழக அரசோ, மற்ற அரசியல் கட்சிகளோ, வேறு யாருமே உதவ முன் வராத நிலையில், முதன்முதலாக நேரடியாக செல்ஃபோனில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட பூபாலன், அவரது தாய் சத்யா ஆகியோருடன் புரட்சித்தாய் சின்னம்மா பேசி ஆறுதல் தெரிவித்ததுடன், எதற்கும் கவலைப்பட வேண்டாம் எனக் கூறி தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். பாதிக்கப்பட்ட இளைஞர் பூபாலன், எதிர்கால வாழக்கைக்காக சுய தொழில் செய்து வருமானம் ஈட்டிக் கொள்ளும் வகையில், அதற்கு தேவையான உபகரணங்களை புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளன்று வழங்குவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரண்டு கால்களையும் இழந்து பாதிக்கப்பட்ட இளைஞர் பூபாலனுக்‍கு, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் கலவை இயந்திரம், இரும்பு கம்பிகளை வளைக்கும் மின்சார இயந்திரம், சிமெண்ட் கலவை பூச்சு மின்சார இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை புரட்சித்தாய் ​சின்னம்மா வழங்கினார். இந்த இயந்திரங்கள் அனைத்தும் வாகனம் மூலம் விழுப்புரத்தைம் அடுத்த சோழாம்பூண்டி கிராமத்தில் உள்ள இளைஞர் பூபாலன் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பூபாலன் மற்றும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புரட்சித்தாய் சின்னம்மா வழங்கிய இயந்திரங்களை, பாதிக்கப்பட்ட இளைஞர் பூபாலனும், அவரது குடும்பத்தினரும் பார்த்து மன நெகிழ்ச்சி அடைந்தனர். யாருமே உதவ முன் வராத நிலையில், சுயதொழில் செய்து வருமானம் ஈட்டிக்‍ கொள்ள ஏதுவாக, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு இளைஞர் பூபாலனும், அவரது குடும்பத்தினரும் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இரண்டு கால்களையும் இழந்து பாதிக்கப்பட்டுள்ள இளைஞர் பூபாலன், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தானே சுய தொழில் செய்து வருமானம் ஈட்டிக் கொள்ளும் வகையில் இயந்திரங்களை வழங்கி, பூபாலனின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ள புரட்சித்தாய் சின்னம்மாவின் பேருதவிக்‍கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Night
Day