கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை புரிந்து கொள்ள முடியவில்லை என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், தமது வரம்புக்குள் வராத வழக்கை விசாரித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிரான மற்றும் சிபிஐ விசாரணை கோரி பாதிக்கப்பட்டோர் தாக்கல் செய்தது உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வில் இன்று நடைபெற்றது. 

அப்போது, போலீசார் அறிவுறுத்தலின்படியே சம்பவ இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார் என்றும் விஜய் இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கல் ஆகிவிடும் என போலீசார் தெரிவித்ததாகவும் தவெக தரப்பில் வாதிடப்பட்டது. எனவே விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

கரூர் சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதால் அந்த விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்த கோருவதாகவும் மனுதாரர் தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்ட்டது. 

இதைத் தொடர்ந்து குறுக்கிட்ட நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பதில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வரம்பிற்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எப்படி விசாரிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பினர்.

நீதிபதியின் கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை முறையாக நடைபெறுகிறது, அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் விசாரணைக் குழுவின் அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அரசால் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பிற்பகலும் தொடர்ந்து நடந்த விசாரணையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உண்மை நிலவரம் வெளிவர வேண்டும் என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் பிரித்திக்கின் தந்தை தரப்பில் முறையிடப்பட்டது. 

மேலும், ரவுடிகள் கூட்டத்தில் நுழைந்ததாலும், காவல்துறை தடியடி நடத்தியதாலும்தான் நெரிசல் ஏற்பட்டது என்றும், கூட்டத்திற்குள் பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் உள்ளே வேகமாக நுழைந்தது என்றும் மற்றொரு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி புகைப்படம் இருந்தது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்கள் அவசரஅவசரமாக உடற்கூராய்வு நடத்தப்பட்டிருக்கிறது என்றும், 41 உடல்களை உடற்கூராய்வு ஆய்வு செய்ய இரவோடு இரவாக அத்தனை மருத்துவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதால் சிபிஐ விசாரணை தேவை என்றும் 

கூட்ட நெரிசல் சம்பவம் காவல்துறையின் முழு தோல்வி என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் எங்கிருந்தார்கள் என்பது தெரியவில்லை சமூக விரோத சக்திகளும் கூட்டத்திற்குள் புகுந்து இருக்கிறார்கள் என்று தோன்றுவதால் சிபிஐ விசாரணை கோருவதாக உயிரிழந்த சந்திரா என்பவரது கணவர் தரப்பில் முறையிடப்பட்டது. 

அப்போது, இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை பரஸ்பரம் குறை சொல்லி கொண்டே இருக்க முடியாது, என்ன நடந்தது என்பது வெளிவர வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், இவ்வழக்கில் விரிவான பிரமாண பத்திரமரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து மனுக்கள், பிரமாண பத்திரங்களை பார்த்த பின்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Night
Day