எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப்பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர் அனல் மின் திட்டத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு நிலக்கரிகளை மழையில் இருந்து பாதுகாத்து தனி இடத்தில் வைப்பதற்காக ராட்சத வளைவு அமைக்கும் பணியானது நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது சாரம் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் 5 பேரும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 4 பேரும் என மொத்தம் 9 வட மாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த ஜார்க்கண்ட் மாநில தொழிலாளிக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் வட மாநில தொழிலாளியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்பாரதவிதமாக இந்த விபத்து நடைபெற்றதாகவும், மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து சம்பவம் அறிந்து பிரதமர் மோடி வருத்தமடைந்ததாகவும், இந்த கடினமான தருணத்தில், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் 2 லட்ச ரூபாயும், காயமடைந்த நபர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.