எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.
வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஏமூர் பகுதியில் உள்ள கருப்பாயி கோயில் தெருவை சேர்ந்த கிருத்திக் யாதவ் என்ற 7 வயது சிறுவன், கூட்ட நெரிசலில் உயிரிழந்தநிலையில் அவரது குடும்பத்தினரை நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவினர் உடன் சென்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தநிலையில், மீட்கப்பட்ட தனது மகனுக்கு மருத்துவமனையில் முறையான சிகிக்சை வழங்கப்படாததும், போலீசார் போதிய பாதுகாப்பு வழங்காததும் காரணம் என உயிரிழந்த சிறுவனின் தாய் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
ஏமூர் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அருக்காணி என்பவரின் குடும்பத்தினரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். ஏமூர் கிராமத்தை சேர்ந்த 5 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரித்விக் என்ற 10 வயது சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார்.