எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம் அருகேயுள்ள குதிரை சந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்காக பள்ளியில் பயின்று வரும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது.
10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இந்த முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முகாம் நடத்துவதாக இருந்தால் விடுமுறை நாளில் நடத்தி இருக்கலாம் - அதை விட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து முதன்மை அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அலட்சியமாக பதில் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.