அமைச்சரை முற்றுகையிட்டு மக்கள் சரமாரி கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

கண்ணகி நகரில் துப்புரவுப் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு  மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், அமைச்சர் மா சுப்பிரமணியனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. இந்த நிலையில் திருவான்மியூரில் தூய்மை பணியை செய்வதற்காக வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், கண்ணகி நகர் 11 ஆவது குறுக்கு தெரு வழியாக இன்று அதிகாலை நடந்து சென்றுள்ளார். அப்பொழுது சாலையில் தேங்கி இருந்த மழை நீரில் மின்சார வயர் ஒன்று அறுந்து விழுந்து தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து இருந்துள்ளது. இதை அறியாமல் நடந்து சென்ற வரலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இதனிடையே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதற்காக கண்ணகி நகருக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியனை, அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர். மின்வாரியத்தின் அலட்சியத்தால், தூய்மை பணியாளர் உயிரிழந்தாக மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறப்போர் இயக்க குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும் என கேட்டுள்ளது. கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளதாக ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. சமூக நீதி வெறும் பேச்சில் இருந்தால் பத்தாது. செயலிலும் சிறிதாவது இருக்க வேண்டும் என்றும், இந்த அலட்சியத்திற்கு காரணமான மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அதிகாரிகள் மீது உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, பூட்ஸ், காலனி உள்ளிட்டவைகளை மாநகராட்சி ஒப்பந்த நிறுவனங்கள் வழங்காமல் இருப்பதே தூய்மை பணியாளர்கள் உயிரிழப்புக்கு காரணம் என ஒழிப்போர் உரிமை இயக்கம் குற்றச்சாட்டு உள்ளது. மேலும், உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.


Night
Day