அண்ணாமலை ஆடியோ ஆடி(யோ) ஆஃபர்ல - ஆடிப் போய்டுவீங்க ஆடி

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும், முன்னாள் காவல் அதிகாரி ஜாபர் சேட்டும் பேசிய ஆடியோவை வெளியிட்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீண்டும் புயலை கிளப்பியுள்ளார்... அடுத்தடுத்து ஆடியோ வெளியாவதால் திமுக எம்.பி.க்கள் ஆடிப்போய் கிடப்பது பற்றிய தொகுப்பை தற்போது காண்போம்.

கடந்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பி்னர்களின் சொத்து விவரங்களை வெளியிட்ட பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதை தொடர்ந்து திமுக கோப்புகள் 1 என்ற பெயரில் ஆடியோவை வெளியிட்டார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

அதில் அப்போதய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் பி.டி.ஆர். பேசிய அந்த ஆடியோவில் மு.க.ஸ்டாலினிம் மகனும், மருமகனும் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. 

பின்னர் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பி.டி.ஆர். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்.

இதையடுத்து திமுக கோப்புகளின் இரண்டாம் வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி வெளியிட்டார்.

அதில் 2006 முதல் 11ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, ​​அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் உரிமையை தனியாருக்கு மாற்றி, கருவூலத்துக்கு 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என முதல்வர் ஸ்டாலினை நோக்கி அம்பு வீசினார் அண்ணாமலை.

இதை தொடர்ந்து திமுகவின் ஊழல்கள் குறித்த கோப்புகளை ட்ரங்குப்பெட்டியில் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கினார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

தற்போது திமுகவின் டி.ஆர். பாலுவும் முன்னாள் காவல் அதிகாரி ஜாபர் சேட்டும் பேசிய ஆடியோவை வெளியிட்டார் பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை.

2ஜி ஊழல் வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் செய்திகளைக் கையாண்டது குறித்த தகவல் பரிமாற்றங்கள் முதல் ஆடியோ டேப்பில் இடம்பெற்றிருந்தது.

2ஜி ஊழல் குறித்த சிபிஐ விசாரணையை திமுக எப்படி கையாண்டது என்பது பற்றி இரண்டாவது டேப் அம்பலப்படுத்தியது....  இந்த உரையாடலில் சாட்சிகள் மிரட்டப்பட்டது தெரியவந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் திமுகவுக்கு எதிரான 3-வது ஆடியோவை வெளியிட்டுள்ளார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை... திமுக எம்.பி. ஆ. ராசா முன்னாள் காவல் அதிகாரி ஜாபர் சேட் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலில் சிபிஐ விசாரணையைக் கையாள்வது, அமைச்சரின் விருப்ப பட்டியலில் இருந்தவர்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டது பற்றி பேசப்பட்டதாக தெரிகிறது.

மூன்றாவது ஆடியோ வெளியிடப்பட்ட நிலையில் தொடர்ந்து ஆடியோ வெளியாகும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதனால் திமுக எம்.பி.க்களும், முக்கிய தலைவர்களும் ஆடிப்போயுள்ளனர்.

Night
Day