"பால் விலையை குறைக்காமல் ஏமாற்றும் ஆவின்" - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜிஎஸ்டி வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளநிலையில், விற்பனை விலையை குறைக்காமல் தள்ளுபடி என்ற பெயரில் ஆவின் நிர்வாகம் ஏமாற்றுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனரும் மாநில தலைவருமான பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3ம் தேதி நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் UHT பால் மற்றும் பனீர் வகைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும், நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், ஐஸ்கிரீம் வகைகளுக்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதாக கூறியுள்ளார். 

இந்த சூழலில் ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்ததையடுத்து பால் பொருட்கள் உற்பத்தியில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்குவதற்கான முயற்சியாக, விற்பனை விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக பொன்னுசாமி குறிப்பிட்டுள்ளார். 

GFX IN அதன்படி, நெய் ஒரு லிட்டருக்கு 50 ரூபாய் வரையிலும், வெண்ணெய் ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் வரையிலும், சீஸ் ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் வரையிலும், பனீர் ஒரு கிலோவிற்கு 25 ரூபாய் வரையிலும், UHT பால் லிட்டருக்கு 3 ரூபாய் வரையிலும், ஐஸ்கிரீம் வகைகளுக்கு குறைந்தபட்சம் 5 ரூபாய் வரையிலும் விற்பனை விலையை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனியார் பால் நிறுவனங்களின் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் பாராட்டுவதாக பொன்னுசாமி கூறியுள்ளார். 

ஆனால், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்காமல் நெய் சந்தை நிலைமை மற்றும் விற்பனையை கருத்தில் கொண்டு, நெய் வாடிக்கையாளர்களுக்கு 22ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை தள்ளுபடி கொடுப்பது போல் தெரிவித்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வெண்ணெய், சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை விலையை குறைக்காமல், நெய், பனீர், UHT பால் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை மட்டும் சலுகை விலையில் வழங்குவது போல அதற்கான விலைப்பட்டியலை, கடந்த 19ம் தேதி கடிதம் மூலம் ஆவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள பொன்னுசாமி, இதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கும் வகையில் நெய் விற்பனை விலை குறைப்பை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன் வெண்ணெய், பனீர், சீஸ், UHT பால், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையையும் முழுமையாக குறைக்க ஆவின் நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும், அவ்வாறு ஆவின் நிர்வாகம் ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை குறைக்க முன் வராவிட்டால் மத்திய அரசு ஆவின் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

மேலும் ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலை கணிசமாக குறைப்பால் பொதுமக்கள் பெரிதும் பலனடைவார்கள் என்பதால், வரி குறைப்பிற்கு காரணமாக இருந்த பிரதமர்  மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பொன்னுசாமி கூறியுள்ளார்.

Night
Day