எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடும்போது, மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் கல்வித்தரம் தொடர்ந்து சரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். கல்வித்தரத்தில் ஏற்பட்ட இந்த சரிவு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதித்து இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழக மக்கள் அடிப்படையிலேயே தங்கள் கல்வி மற்றும் வாய்ப்புகளுக்காக அரசு கல்வி நிறுவனங்களை நம்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை எட்டும் பயணத்தில் தரமான கல்வி கிடைக்காத பெரிய எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டிருப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.