நாங்க இல்லாம கவிப்பேரரசு இல்லை... சீறிய கங்கை அமரன்...

எழுத்தின் அளவு: அ+ அ-

இளையராஜா குறித்து  மறைமுகமாக விமர்சித்தது தொடர்பாக வைரமுத்து மற்றும் கங்கை அமரன் இடையே மோதல் வலுத்து வருகிறது. இரு பெரும் ஜாம்பவான்களிடையே ஏற்பட்ட உரசல் பெரிதாகி வருவது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, பாடல் வரிகளும் இசையும் கலந்ததுதான் ஒரு நல்ல பாடல் என தெரிவித்திருந்தார். மேலும், இசை பெரியதா? பாடல் வரி பெரியதா? என கேட்பவன் ஞானி அல்ல அஞ்ஞானி என்றும், இளையராஜாவை மறைமுகமாக சீண்டி இருந்தார்.வைரமுத்து பேசிய பேச்சு தீப்பொறியாய் விழுந்து தற்போது பெருந்தீயாய் கொழுந்து விட்டு எரிகிறது. 

இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கும் விதமாக வைரமுத்து பேசியது இளையராஜாவின் குடும்பத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக இளையராஜாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் வெயிட்டுள்ள வீடியோவில்  வைரமுத்துவை பகிரங்கமாக தாக்கி பேசியுள்ளார்.  வைரமுத்துவை வளர்த்து விட்டதே தாங்கள்தான் என்றும், இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், வைரமுத்துவுக்கு நன்றி விசுவாசம் இல்லை என கடுமையாக பேசி இருந்தார். வைரமுத்து நல்ல பாடலாசிரியர் என்பது உண்மைதான் எனக்குறிப்பிட்ட கங்கைஅமரன், தான் கூட அவரது பாடல் வரிகளை ரசித்ததாகவும், ஆனால்,  வளர்ந்துவிட்ட பின் அவரது பேச்சு சரியில்லை என்றும் குறிப்பிட்டதோடு, வைரமுத்து  ஒரு நல்ல மனிதர் கிடையாது என பேசியிருந்தார். மேலும், இனி இளையராஜா குறித்து தவறாக பேசினால் நடப்பதே வேறு என எச்சரித்ததோடு,  தனது பேச்சுக்கு வைரமுத்து பதில் அளிக்க கூட தேவையில்லை எனவும் பேசி இருந்தார்.

கங்கை அமரன் நேரடியாக வைரமுத்துவை தாக்கி பேசியதற்கு கண்டனங்களும் எழுந்துள்ளன. வைரமுத்து புரிந்த சாதனைகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சிறிய உரசலை கங்கை அமரன் பெரிதாக்கி விட்டார் என்றும் விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில், கங்கை அமரனின் பேச்சுக்கு, எதிர்வினை ஆற்றியுள்ள வைரமுத்து, மீண்டும் தனது கருத்தை உறுதி படுத்தும் விதமாக தனது பாடல் வரிகளில் வெளியான புதிய படத்தை பாராட்டி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், FINDER திரைப்படக்குழுவினர் தன்னை வீட்டிற்கு வந்து சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், அப்போது, பாட்டு வரிகள் படத்திற்கு பலம் என புகழ்ந்ததாகவும் பதிவிட்டுள்ளார். 

இசை பெரிதா?, பாடல் வரிகள் பெரிதா? என்பதை ஆராய்வதை விட திரைத்துறையின் இரு பெரும் ஆளுமைகளான இசைஞானி இளையராஜா, கவிப்பேரசு வைரமுத்து ஆகியோர் தங்களுக்கு இடையிலான உரசல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே  முக்கியம் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day