எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை வளசராவாக்கம் மின் மயானத்தில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் திரை பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கர், நேற்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரோபோ சங்கரின் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, வையாபுரி, அப்புக்குட்டி, புகழ், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஸ், ரேகா, கவிஞர் சினேகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமாகா கட்சி தலைவர் ஜி.கே. வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, வளசரவாக்கம் இல்லத்தில் இருந்து ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்லமாக எடுத்து செல்லப்பட்ட ரோபோ சங்கரின் உடலுக்கு, வளசரவாக்கம் மின்மயானத்தில் அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தனர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் திரளானோர் கலந்து கொண்டு ரோபோ சங்கருக்கு கண்ணீர்மல்க பிரியாவிடை அளித்தனர்.