மயிலாடுதுறை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே 11 வருட காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்ற இளைஞர், இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். அவர், பெரியகுளம் பகுதியை சேர்ந்த மாலினி என்ற பெண்ணை கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மாலினி சென்னையில் வேலை செய்து வரும் நிலையில் இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ஆனாலும் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி மாலினி தனது காதலனுடன் சென்றுள்ளார். இதையடுத்து இருவருக்கும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த வைரமுத்துவை மர்மநபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர். உயிருக்கு போராடிய வைரமுத்துவை மீட்ட உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் இது ஆணவக்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இளைஞர் வைரமுத்துவை காதலின் குடும்பத்தினர் வெட்டிக் கொலை செய்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மயிலாடுதுறையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் வைரமுத்துவை சில நாட்களுக்கு முன்பு, அவரது காதலியின் தாயார் மிரட்டியது தொடர்பான காட்சியும் வெளியாகியுள்ளது. இளைஞர் வேலை செய்யும் மெக்கானிக் கடைக்கு சென்று பெண், தனது மகளுடன் பழகுவதை நிறுத்துமாறு கூறி, காது கூசும் அளவிற்கு ஆபாசமான பேசியுள்ளார்.

இதேபோல் பெண்ணின் தம்பியும் தொலைபேசி மூலம் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகியுள்ளது.

11 ஆண்டுகளாக காதலித்தும் தோற்றுவிட்டேனே என படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் காதலி மாலினி கதறியுள்ளார். நாளை பதிவு திருமணம் செய்யவிருந்த நிலையில் காதலனை கொன்றுவிட்டதாக காதலி கண்ணீர் விட்டு கதறினார்.

Night
Day