எழுத்தின் அளவு: அ+ அ- அ
ரஷ்யாவின் காம்சட்கா பகுதியில் ரிக்டர் அளவில் 8.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஜப்பான் தீவுகளை சுனாமி அலைகள் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுனாமி தாக்கியதன் காரணமாக ரஷ்யாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 8.8 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ரஷ்யா, ஈக்வடார், ஜப்பானின் கடலோர பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கரையோர மக்கள் ஏற்கனவே அகற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிலி, சாலமன் தீவுகளில் கடல் அலைகள் 1 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதனிடையே சுனாமி தாக்கியதால் ரஷ்யாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவை தொடர்ந்து ஜப்பானையும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். ஜப்பானின் ஹொக்கைடோவின் மாகாணம், hanasaki துறைமுகத்தை சுனாமி அலைகள் தாக்கியது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் இடைவிடாமல் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்படுகிறது. தொடர்ந்து ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கிய நிலையில் அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம், ஹவாய் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஹவாய் தீவு மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஹவாய் தீவின் கடற்கரை பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக, எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மக்கள் வலிமையாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கிய நிலையில் இந்தியாவை சுனாமி தாக்க வாய்ப்பில்லை என இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்திய கடலோர மக்கள் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் எனவும், வங்கக்கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.