ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் மீது ஈரான் 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து இருநாடுகளுக்கு இடையே போர் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பதில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

காஸா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், சுமார் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. மேலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறி ஏராளமானோர் உயிரிழந்த சம்பவத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் மத்திய கிழக்கில் பதற்றமான சூழலை உருவாக்கியது. ஆனாலும் ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி லெபனான் மீது வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் படை நடத்தி வந்தது. இந்த சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் போர் தாக்குதலை தொடங்கியது. டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. இதனால் ஏவுகணை தாக்குதலை குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் அலறின.

இஸ்ரேலில் உள்ள லட்சக்கணக்கான பொதுமக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர்கள் அங்கிருந்து வெளியே வரவேண்டாம் என்று இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து ஈரான் ஏவிய ஏவுகணைகளின் பெரும்பாலானவை நடுவானில்  இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டூம் சுட்டு வீழ்த்தின. ஆனாலும் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Night
Day