இஸ்ரேல் மீது போரை தொடங்கியது ஈரான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி போர் தொடுத்துள்ள நிலையில், ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இதில், இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கோபமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. 

இந்த நிலையில், இன்று அதிகாலை இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு  ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்துவருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

தாக்குதலில் இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன. அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன. ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனைக்குபின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரானிய தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலுக்கு "இரும்புக் கவச" ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

இதனிடையே மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை தத்தமது நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளன.



varient
Night
Day