சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 48 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 18ஆவது மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேசும் போட்டியிட்டனர். 

மக்களவை கூடியதுடன் சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதனை தொடர்ந்து எதிர்கட்சி சார்பில் சபாநாயகர் பதவிக்கு கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை எதிர்க்கட்சி எம்பிக்கள் முன்மொழிந்தனர்.   

குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற ஓம் பிர்லா வெற்றிபெற்று, சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், 2வது முறையாக பிர்லாவே மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் அனைவரும் கரகோரஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜீ ஆகியோர் ஓம் பிர்லாவை அழைத்துவந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா மீண்டும் அமர்ந்திருப்பது இந்த அவையின் அதிர்ஷ்டம் என பெருமிதம் தெரிவித்தார். மேலும் ஓம்பிர்லாவின் பணிகள் புதிய எம்.பிக்களுக்கு நிச்சயம் முன்மாதிரியாக விளங்கும் எனவும், நாட்டின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய இந்த அவை சபாநாயகருக்கு துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் பேசுவதற்கு எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அரசுக்கு அதிகாரம் உள்ள போதிலும் மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் செயல்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதனையடுத்து மக்களவையில் உரையாற்றிய சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசர நிலை, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் அவசரநிலை காலம் இந்தியாவின் கருப்பு அத்தியாயம் எனவும் தெரிவித்தார். சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.Night
Day