எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் கதவுகளை பிடித்துக் கொண்டு பள்ளி மாணவி ஆபத்தான நிலையில பேருந்தின் பின்னால் ஓடிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி பேருந்து நிலையம் முதல் ஆலங்காயம் வரை அரசு நகரப் பேருந்து சென்று வருகிறது. இந்த பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வாணியம்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று ஆலங்காயம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கொத்தக்கோட்டை என்ற இடத்தில் பள்ளி மாணவி ஒருவர் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற நிலையில், மாணவி ஏறுவதற்கு முன்பே ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பேருந்தின் பின்பக்க கதவை பிடித்துக் கொண்டு நீண்ட தூரம் அரக்கபரக்க ஓடிச்சென்றார்.
நீண்ட தூரம் ஓடிய பின்பு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி மாணவியை ஏற்றிச் சென்றார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலாகி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அலட்சியமாக செயல்பட்ட அரசு பேருந்தின் ஒட்டுநர் முனிராஜ் மற்றும் தற்காலிக நடத்துனர் அசோக்குமார் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆம்பூர் அரசு போக்குவரத்து கழக மேலாளர் கணபதி உத்தரவிட்டுள்ளார்.