டாக்டரில் இருந்து ஐ.ஏ.எஸ். வரை... சாதித்த பெண் மருத்துவர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் பெண் மருத்துவர் வினோதினி. அவர் சாதனை படைக்க காரணமாக இருந்தது எது.... விரிவாக்க பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட உயரிய பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகியவை முறைப்படி நடத்தப்பட்டன.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு, இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், நாடு முழுவதம் 1016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பொது பிரிவில் 347 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 115 பேர், ஓ.பி.சி. பிரிவில் 303 பேர், எஸ்.சி. பிரிவில் 165 பேர், எஸ்.டி. பிரிவில் 86 பேர் என மொத்தம் 1016 பேர் வெற்றியடைந்துள்ளனர்.

அதன்படி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவராக பணிபுரியும் வினோதினி, சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 64வது இடத்தையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதலிடத்தையும் பிடித்து சாதித்து காட்டியுள்ளார். 

புதுச்சேரி காவல் துறையில் ஐஜி-யாக பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரன் என்பவரது மகள் வினோதினி, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து மருத்துவராகி கடந்த 8 ஆண்டுகளாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். 

சிவில் சர்வீஸ் தேர்வை 4 முறை முயற்சி செய்து 5 வது முறையாக தேர்ச்சி பெற்றுள்ள வினோதினி, தனது தந்தை காவல் துறையில் இருந்தபோது அவரது சேவையினால் பலர் பயணடைந்துள்ளதை பார்த்து, சிவில் சர்வீஸ் தேர்வை எழுத வேண்டும் என ஆர்வம் வந்ததாக கூறினார்.

மருத்துவ துறையிலும் எண்ணற்ற சேவை செய்ய முடிந்தாலும், ஒரே துறை சார்ந்த சேவையாக இல்லாமல், பிற துறைகள் மூலம் மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என்பதற்காக சிவில் சர்வீஸ் தேர்வை விடாமல் முயற்சி செய்து,  அதில் வெற்றி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

 வேளாண் மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தனது தனி கவனத்தை செலுத்தி, எல்லோருக்கும் கல்வி எளிதாக கிடைக்க செய்வதே தனது இலக்கு என்றும் வினோதினி கூறியுள்ளார். 

பார்த்தீபன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட வினோதினிக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. வினோதினியும் அவரது கணவர் இருவருமே ஒரே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். 

Night
Day