"வூப்பிங் காஃப்" எனப்படும் கக்குவான் இருமல்... உயிர் பெற்ற பழைய நோய்..! ஷாக் ரிப்போர்ட்...

எழுத்தின் அளவு: அ+ அ-

"வூப்பிங் காஃப்" எனப்படும் கக்குவான் இருமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் பரவி வருவதோடு, சீனா, பிலிப்பைன்ஸ், செக் குடியரசு மற்றும் நெதர்லாந்து நாடுகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ள கக்குவான் இருமல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.....


பெர்டுசிஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட நோய்த்தொற்று, ஆங்கிலத்தில் வூப்பிங் காஃப் என்றும், தமிழில் கக்குவான் இருமல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது என்பது கடினம். மேலும், குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோய், அவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும், சீனாவில் 13 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும்,  32 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 20 மடங்கு அதிகம் என சீனா தெரிவித்துள்ளது. 

2024ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 54 பேர் இந்த நோய்க்கு இறந்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட நோயின் தொற்று எண்ணிக்கை 34 மடங்கு அதிகமாக இருப்பதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. 

CDC எனப்படும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் கூற்றுப்படி, மேல் சுவாச மண்டலத்தை குறிவைத்து, நச்சுகளை வெளியிடும் பாக்டீரியம் போர்டெடெல்லா பெர்டுசிஸால் இந்த தொற்று நோய் ஏற்படுவதாக தெரிகிறது. 

மூக்கடைப்பு, லேசான காய்ச்சல், லேசான இருமல் போன்ற சாதாரண ஜலதோஷத்தின் அறிகுறிகளை போலவே இந்த நோய் காணப்படுவதால், அறிகுறிகள் கடுமையாகும் வரை இந்நோயினை தாக்கத்தை கண்டறிவது கடினமாக உள்ளது.

ஓரிரு வாரங்களில் அறிகுறி, விரைவாகவும், தீவிரமாகவும் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.  இருமலால் பாதிக்கப்பட்டவர், சுவாசிக்கும்போது, ​​அதிக சத்தத்துடன் இருமல் இருக்கும் என்றும் 10 வாரங்கள் வரை இந்த இருமல் நீடிக்கும் என CDC தெரிவித்துள்ளது. 

மிக தீவிரமான அறிகுறிகளை குழந்தைகள் எதிர்கொள்வர். அதே சமயம் குழந்தைகளுக்கு இருமல் இல்லை என்றாலும் சுவாசத்தை நிறுத்திவிடும் அபாயமும் இந்த தொற்றிற்கு உள்ளது என்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

நோயாளிக்கு 3 வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால் நோய் எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படாது, காரணம் நோயை உருவாக்கும் பாக்டீரியா உடலை விட்டு வெளியேறிவிடும், இருப்பினும் அதன் தாக்கம் உடலுக்குள் தொடர்ந்து இருக்கும்.

சீனாவில், டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் இலவச தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவில் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என ஒரு தடுப்பூசியும், ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மற்றொரு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. அதேபோல், இங்கிலாந்திலும் தடுப்பூசிகள் வழங்கப்படுவது வழக்கமாகவே உள்ளது. இதற்கிடையே, இந்த நோய்க்கான தடுப்பூசி விநியோகத்தில் மே மாதத்திற்குள் தட்டுப்பாடு ஏற்படும் என பிலிப்பைபன்ஸ் எச்சரித்துள்ளது.

இந்தியாவில், போடப்படும் DPT அல்லது DTP தடுப்பூசி மூலம், டிப்தீரியா, பெர்டுசிஸ் எனப்படும் கக்குவான் இருமல், மற்றும் டெட்டனஸ் நோய்களை தடுக்க முடியும். எனவே, பெற்றோர் உரிய நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகளை போடுவதன் மூலம் இந்த நோயில் இருந்து குழந்தைகளை காக்க முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

varient
Night
Day