NDA எம்.பி.க்கள் குழு செய்தியாளர்களுக்கு பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

 கரூரில் நடந்த கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை எனவும் உள்நோக்கத்துடன் நிகழ்ந்ததுபோல் தெரிவதாகவும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த என்டிஏ கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவின் தலைவரான பாஜக எம்பி ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

கரூரில் தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிந்து அறிக்கை அளிப்பதற்காக ஒன்பது எம்பிக்கள் அடங்கிய குழுவை பாஜக அமைத்துள்ளது. நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி தலைமையிலான இந்த குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடமான கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேரில் ஆய்வு செய்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம், ஜெனரேட்டர் அறை, மரக்கிளை முறிந்த இடம், கழிவுநீர் கால்வாய்களில் தொண்டர்கள் விழுந்த இடம் என சம்பவம் தொடர்புடைய அனைத்து இடங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது பெருந்துயர சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நாயினார் நகேந்திரனும், பாஜக மூத்த தலைவர் அண்ணாமலையும் விளக்கினர். மேலும், அப்பகுதி மக்களிடமும் சம்பவம் குறித்து பாஜக எம்.பி. ஹேம மாலினி தலைமையிலான குழுவினர் விசாரித்து தெரிந்துக்கொண்டனர்.

தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை மேற்கொண்ட என்டிஏ கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர், சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என  கேட்டறிந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய என்டிஏ கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவின் தலைவரான பாஜக எம்பி ஹேம மாலினி, அரசியல் வரலாற்றிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது இல்லை எனவும், முறையான ஏற்பாடுகளை செய்து தர தமிழக அரசு தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். அங்கிருந்த மக்கள் கூறுவதை கேட்கும்போது இவை விபத்து போல் தெரியவில்லை என கூறிய ஹேம மாலினி, உள்நோக்கத்துடன் செய்ததுபோல் தெரிவதாகவும் கூறினார். ஆயிரம் பேர் கூட நிற்க முடியாத குறுகலான இடத்தில் 30 ஆயிரம் பேர் கூடியதாலேயே அசம்பாவிதம் நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். சிறிய இடத்தை விஜய் தரப்பில் கேட்டிருந்தாலும் பெரிய இடத்தை தமிழக அரசு வழங்கியிருக்க வேண்டும் என கூறிய ஹேம மாலினி, பெரிய நடிகரான விஜய் பிரச்சாரம் செய்ய குறுகிய இடத்தில் தமிழக அரசு அனுமதி கொடுத்தது நியாயமில்லை என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. அனுராக் தாக்கூர், மாவட்ட நிர்வாகத்தினரையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் சந்தித்து விசாரிக்க உள்ளதாகவும், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை எனவும் கூறினார். நியாயமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் எனக்கூறிய தாக்கூர், ஆளுங் கட்சியும், தமிழக அரசும், தமிழக வெற்றிக்கழகமும் இந்த சம்பவத்திற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற என்டிஏ கூட்டணி எம்.பி.கள் குழுவினரின் கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் சென்றபோது தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழுவினரின் கார்கள் அடுத்தடுத்து மோதியதில், எம்.பி ஹேமமாலினி பயணம் செய்த காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில், ஹேமமாலினி அதே காரில் புறப்பட்டு கரூர் சென்றார்.


Night
Day