எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாகவும், வரும் 27ம் தேதி தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இதனிடையே தமிழகத்திற்கு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் வரும் 27ம் தேதி நீலகிரி மற்றும் கோவை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 நாட்களும் 7 முதல் 11 சென்டி மீட்டர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 3 நாட்களும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.