41 பேர் உயரிழப்பு வேதனை அளிக்கிறது - நிர்மலா சீதாராமன்

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய அரசு துணை நிற்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றும் இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது எனவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உறவினர்களை இழந்து கதறி அழுவதை பார்த்து அவர்களுக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியவில்லை எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த சம்பவத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு பேசவும், யாரையும் குற்றம்சாட்டவும் விரும்பவில்லை என்றும், கட்சி சார்பில் விமர்சனங்களை முன்வைக்க தான் வரவில்லை எனவும் கூறினார். யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய அரசு துணை நிற்கும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Night
Day