எழுத்தின் அளவு: அ+ அ- அ
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் டெல்லியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 26ம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று டெல்லி மோதிலால் சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு கட்சியினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மன்மோகன் சிங்கின் உடல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட், ஹிமாச்சல் பிரதேசம் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து நிகாம் போத் காட் பகுதியில் நடைபெறும் இறுதி அஞ்சலிக்காக மூவர்ண கொடி போர்த்திய மன்மோகன் சிங்கின் உடல் ராணுவ வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. மன்மோகன் சிங் உடல் எடுத்து செல்லப்பட்ட ராணுவ வாகனத்தில் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் உடன் சென்றனர்.
முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் நிகாம் போத் காட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத்தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் என அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.