எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களிலும், பிரசித்தி பெற்ற கோயில்களிலும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது இதமான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வார விடுமுறை தினத்தையொட்டி, ஏராளமானோர் குற்றாலம் பகுதியில் குவிந்தனர். சாரல் மழையில் நனைந்தபடி, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். கூட்டம் அதிகரிப்பால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் அப்பகுதியே களைகட்டியது. சுற்றுலா பயணிகள் தங்களின் குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக பரிசலில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால், மீன் வியாபாரிகள், சாலையோர கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.