எழுத்தின் அளவு: அ+ அ- அ
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா மாநிலங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இதன் காரணமாக, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை நகர் பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.