லாக்அப் மரணம் குறித்து வாய் திறக்காத திமுக கூட்டணி கட்சிகள் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞரை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஸ்டாலின் முதலமைச்சரான பின்தான் காவல்துறை கொலைத்துறையாக மாறியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், லாக் அப் மரணம் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்கவில்லை என்றும் கூட்டணிக்காக தமிழக மக்களின் நலனை அடகு வைத்து விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டினார். இந்த சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினால் என்ன? நடத்தாவிட்டால் என்ன? என்று எல்.முருகன் விமர்சித்தார்.

இதனிடையே, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் இல்லத்துக்கு சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் இந்த கொலை சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஸ்டாலின் முதலமைச்சரான பின் காவல்துறை கொலைத்துறையாக மாறியுள்ளது என்றும் ஹெச். ராஜா குற்றம் சாட்டினார்.

திருப்புவனம் லாக்-அப் மரண விவகாரத்தில் ஆளும் விளம்பர திமுக அரசுக்கு, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின், பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், விசாரணையின் போது மாரடைப்பு ஏற்படுவது இயல்பு என்று முதலமைச்சர் லாக்-அப் கொலையை நியாயப்படுத்துவதை தமது கட்சி ஏற்கவில்லை என்று கூறினார்.




Night
Day