ரயில் தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற வாகனம் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

விருத்தாசலத்தில் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல கோ. பவழங்குடி கிராமத்திலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு தனியார் வேன் ஒன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கோ. பூவனூர் ரயில்வே கேட் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அஸ்வின், ஜெகதீஸ், வசந்த், அஸ்விகா, அனந்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து குறித்து மங்களம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வாகனம் ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day