மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் பல்வேறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு அணைகளின் நீர்மட்டம் நிரம்பியதால் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 133 புள்ளி நான்கு ஐந்து அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்கு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 143 புள்ளி ஏழு ஆறு அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.  

தென்காசி மாவட்டத்தில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் எழுபத்து எட்டரை அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 77 அடியாக உள்ளது. குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 69 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயர்ந்து 120 அடியை எட்டியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டம் வால்பாறை, வாட்டர் பால், காடம்பாறை, அட்டகட்டி, உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிற்றார்களும் ஓடைகளும் நிரம்பி வழிகின்றன. ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மழையின் அளவு அதிகரித்து கொண்டே இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் அருவிக்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. தற்போது அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

Night
Day