தொடர் மலை காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 3 அடி உயர்ந்துள்ளது.
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தேக்கடி, முல்லைக்கொடி, உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5ஆயிரத்து 323.89 கனஅடியாக அதிகரித்து உள்ளது. தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே வாரத்தில் 3 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் தற்போது முல்லைப்பெரியார் அணை நீர்மட்டம் 131.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் நீர் இருப்பு 5 ஆயிரத்து 83.10 மில்லியன் கனஅடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.