எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழனின் வீரத்தைக் கடல் கடந்து நிலைநாட்டிய தமிழ்ப்பெருவேந்தன் ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை நாளினை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சோழ பேரரசின் புகழ்பெற்ற மன்னரும், தஞ்சை பெரிய கோயிலை கட்டியவருமான மாமன்னன் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை நாளினை கொண்டாடுவதில் பெருமிதம் அடைவதாக தெரிவித்துள்ளார்.
படைத்திறனில் மாபெரும் முன்னோடியாக, வீரத்தில் அரிமாவாக, கட்டடக்கலையில் வியத்தகு கலைஞனாக, சமூக சமத்துவத்தில் புரட்சியாளனாக விளங்கிய மாமன்னன் ராஜேந்திரசோழனின் பெருமைகளையும், அவர் செய்த சாதனைகளையும் உலகிற்கு பறைசாற்றும் நாளாக ஆடித்திருவாதிரை நாளினை கொண்டாடி மகிழ்கிறோம் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களை ஒரே கொடியின் கீழ் ஆண்ட மாமன்னன் ராஜேந்திரசோழன், கப்பல் தயாரித்து பன்னாட்டு வாணிபத்துக்கு வழிவகுத்த பெருமைக்குரியவர் - நீர் மேலாண்மையில் பெரும் கவனம் செலுத்தியதோடு மக்களை சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழவைத்தவர் - மாமன்னன் ராஜேந்திரசோழன் காலத்தில் வணிக வளர்ச்சி சிறப்புடன் இருந்ததாக புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
அவரது ஆட்சிக்காலத்தில் பெண்கள் அதிகாரிகளாக இருந்தார்கள் என்றும் மேலும், பெண்களுக்கு நிலவுடமை இருந்ததையும் எண்ணி மிகவும் பெருமிதம் அடைவதாகவும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் மிகப்பெரிய ராணுவத்தை தன்னகத்தே கொண்டிருந்த ராஜேந்திரசோழன் விவசாய பூமியாக இருந்த தஞ்சையில் விவசாயத்திற்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில், கொள்ளிடகரையாக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தை தேர்ந்தெடுத்து அங்கு புதிய தலைநகரை உருவாக்கி, அதன் மையத்தில் தஞ்சை பெரிய கோயிலை போன்றே அதே சிறப்பு வாய்ந்த பெருவுடையார் கோயிலையும் கட்டினார் - ராஜேந்திரசோழன் தனது படைகளை கங்கைவரை அனுப்பி, அங்கிருந்த மன்னர்களை வென்று, அப்பகுதியிலிருந்து கங்கை நீரை எடுத்து வந்து கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்து கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தினார் - இது ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், வரலாற்று பொக்கிஷமாக, கட்டடக்கலைக்கு சான்றாக, யுனெஸ்கோவின் புராதன சின்னமாக இப்போதும் விளங்கிவருகிறது என புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகிலேயே மிகச்சிறந்த கடற்படையை முதன்முதலில் உருவாக்கிய மாமன்னன் ராஜேந்திரசோழன் வடதிசையில் கங்கைப்பகுதியையும், தென்திசையில் இலங்கையையும், மேற்குதிசையில் கேரளாவையும், கிழக்குதிசையில் கடாரத்தையும் தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்து, இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பேரரசராக விளங்கினார் - சிறந்த நிர்வாகம், திட்டமிடல், ஆட்சித்திறன் ஆகியவற்றின் மூலம் பொற்கால ஆட்சி வழங்கிய ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை நாளில் அவர்தம் வரலாற்றை நினைவில்கொள்வோம் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில்தான் ராஜேந்திரசோழனின் பிறந்த மாதம் ஆடித்திருவாதிரை என்பது உறுதியானதை இந்நாளில் தெரிவிப்பதில் பெருமிதம் அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அதாவது ராஜேந்திரசோழனின் பிறந்த நட்சத்திரம் 2014க்கு முன்புவரை தவறுதலாக `மார்கழித் திருவாதிரை' என்றே கொண்டாடப்பட்டு வந்தது - இதனை அறிந்த புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, குடவாயில் திரு. பாலசுப்ரமணியம், முனைவர் இல.தியாகராஜன் மற்றும் பொறியாளர் கோமுகன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்தது - அதன்பிறகு மேல்பாடி சோழேந்திர சிங்க ஈஸ்வரமுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டு மற்றும் திருவாரூர் கல்வெட்டு ஆகியவற்றில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தது ஆடிமாத திருவாதிரைதான் என உறுதியான வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு முதல் மாமன்னன் ராஜேந்திரசோழனின் பிறந்தநாள் ஆடித்திருவாதிரையாக, கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது - அதேபோன்று கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்குப் பிறகு 2016ம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்துக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றதையும் இந்நாளில் எண்ணிப்பெருமிதம் அடைவதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடிக்கு நேரில் வந்து 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து, 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த நமது இந்திய பிரதமர், அதனைத்தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறுகின்ற நம் பெருமைமிகு மாமன்னன் ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை விழாவில் நேரில் வந்து கலந்துகொண்டது மிகவும் சிறப்பு வாய்ந்தது என புகழ்ந்துரைத்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, இதன் மூலம் மாமன்னன் ராஜேந்திரசோழனின் வரலாற்று சிறப்புகள் நாட்டில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதை எண்ணிப் பெருமிதம் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழனின் வீரத்தைக் கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, ஜாவா வரை நிலைநாட்டிய தமிழ்ப்பெருவேந்தன் ராஜேந்திரசோழனின் வரலாற்று சான்றுகளை போற்றி பாதுகாத்திடுவோம் - தெற்காசியாவை கட்டியாண்ட தமிழர்களின் வரலாற்றை அனைவருக்கும் கொண்டு சேர்த்திடுவோம் என இந்நாளில் உறுதியேற்று, மாமன்னன் ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான 'ஆடிமாத திருவாதிரை' நாளினை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துக் கொண்டுள்ளார்.